இவ்வைணவ திருத்தலம் திருச்சிக்கு அருகில், லால்குடியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில், கொள்ளிடத்தின் தெற்குக் கரையில், கோயிலடி என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த திவ்யதேசம், இந்திரகிரி மற்றும் பலாசவனம் என்ற புராதனப் பெயர்களாலும் அறியப்படுகிறது. இத்திருத்தலம், கர்னாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினம், ஸ்ரீரங்கம், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய ஐந்து தலங்களும் பஞ்சரங்க ஷேத்திரங்கள் எனப்படுகின்றன. இங்குள்ள ராஜகோபுரம், நுட்பமான, அழகிய வேலைப்பாடுகள் நிறைந்தது. இரட்டை பிரகாரங்களுடன், கிட்டத்தட்ட 2.5 ஏக்கர் நிலப்பரப்பில், இக்கோயில் அமைந்துள்ளது.
இவ்வாலயம், இந்திரகிரி என்று அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கு அருள்பாலிக்கும் மூலவர், அப்பக்குடத்தான் (அப்பலா ரங்கநாதர்), மேற்கு நோக்கிய கிடந்த திருக்கோலத்தில், புஜங்க சயனத்தில், உபமன்யு (என்கிற மார்க்கண்டேய) முனிவரை வலக்கையால் அணைத்து ரட்சித்தவாறும், பால் நிறைந்த அப்பக்குடத்தை இடக்கையில் ஏந்தியும், காட்சியளிக்கிறார். தாயாரின் திருநாமங்கள் இந்திரதேவி மற்றும் கமலவல்லி.
தீர்த்தமும், விமானமும் முறையே இந்திர தீர்த்தம் மற்றும் இந்திர விமானம் என்று அறியப்படுகின்றன. பெரியாழ்வார் (பெரியாழ்வார் திருமொழி, இரண்டாம் பத்தில் 2 பாசுரங்கள்), திருமங்கையாழ்வார் (பெரிய திருமொழியில் 17 பாசுரங்கள் மற்றும் பெரிய, சிறிய திருமடல்களில் 2 பாசுரங்கள்), திருமழிசையாழ்வார் (நான்முகன் திருவந்தாதியில் ஒரு பாசுரம்) மற்றும் நம்மாழ்வார் (திருவாய்மொழி 10ஆம் பத்தில் 11 பாசுரங்கள்), இந்த திவ்ய தேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரிய திருமொழி பாசுரங்கள் சில:
**************************
991@
ஊராங்குடந்தை உத்தமன்* ஒருகாலிருகால் சிலைவளைய*
தேராவரக்கர் தேர்வெள்ளம் செற்றான்* வற்றாவருபுனல்சூழ் பேரான்*
பேராயிரமுடையான்* பிறங்குசிறை வண்டறைகின்ற தாரான்*
தாராவயல்சூழ்ந்த* சாளக்கிராமம் அடைநெஞ்சே. 1.5.4
திருவூரகத்து ஸ்ரீமூர்த்தியும், திருக்குடந்தை புருஷோத்தமனும், தன் வில்லால் அசுரரை மாய்த்த ஸ்ரீராமனும் ஆன எம்பெருமான், வற்றாத காவிரி சூழ்ந்த திருப்பேரில் யோக நித்திரையில் உள்ளான் ! ஆயிரம் திருநாமங்களை உடையவனும், மணங்கமழ் துளசி மாலையைத் தன் திருமார்பில் அணிந்தவனும் ஆன அவ்வண்ணலை, அழகிய நீர்ப்பறவைகள் மிக்க செழிப்பான வயல்கள் கொண்ட சாளக்கிராமம் சென்று, பற்றிடு, என் நெஞ்சமே !
**********************
1399@..
பேரானைக்* குறுங்குடி எம்பெருமானை*திருதண்கால்
ஊரானைக்* கரம்பனூர் உத்தமனை*முத்திலங்கு
காரார் திண்கடலேழும்* மலையேழ் இவ்வுலகேழுண்டும்*
ஆராதென்றிருந்தானைக்* கண்டது தென்னரங்கத்தே (5.6.2)
திருப்பேரானும், திருக்குறுங்குடி எம்பெருமானும், திருத்தண்கால் ஊரின் நாயகனும், திருக்கரம்பனூர் உத்தமனும் ஆன சர்வலோக சரண்யன், ஏழு உலகங்களையும், ஏழு மலைகளையும், ஏழு கடல்களையும் (அவற்றை காத்தருள வேண்டி!) விழுங்கிய பின்னரும் (தன் ரட்சித்தலை தொடர வேண்டி!) திருப்தி அடையாதவனாக, ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளாக, அருள் பாலிக்கிறான்.
************************
1432@
வக்கரன் வாய்முன்கீண்ட* மாயனே என்று வானேர்ப்புக்கு*
அரண்தந்துஅருளாயென்ன* பொன்னாகத்தானை*
நக்கரியுருவமாகி* நகங்கிளர்ந்து இடந்துகந்த*
சக்கரச்செல்வன் தென்பேர்த்* தலைவன்தாள் அடைந்துய்ந்தேனே (5.9.5)
கண்ணபிரானாக அசுரனின் வாய் பிளந்து அவனை மாய்த்து தேவர்களை காத்தான். அவனே, பொன்னொளி மின்ன சிம்ம அவதாரமெடுத்து, கொடிய ஹிரண்யனின் உடலை உன் கூரிய நகங்களால் கிழித்து மாய்த்தான். தன் கையில் திருச்சக்கரம் ஏந்தி, திருப்பேர் நகரில் பள்ளி கொண்ட எம்பெருமானின் திருவடி பற்றி நான் உய்வுற்றேனே !
************************
1436@
நால்வகைவேதம் ஐந்துவேள்வி* ஆறங்கம் வல்லார்*
மேலை வானவரில்மிக்க* வேதியர் ஆதிகாலம்*
சேலுகள்வயல் திருப்பேர்ச்* செங்கண்மாலோடும் வாழ்வார்*
சீலமாதவத்தர் சிந்தையாளி* என்சிந்தையானே (5.9.9)
நான்கு வேதங்கள் ஐந்து யாகங்கள் மற்றும் வேதாந்தத்தின் ஆறு அங்கங்கள் பற்றி நன்கு கற்றறிந்தவரும் வானவருக்கும் மேலானவரும், வெகு காலமாக வயல் சூழ்ந்த திருப்பேர் நகரில் திருமாலோடு சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அத்தகைய சான்றோரின் நெஞ்சில் வாழும் அவ்வண்ணலே என் நெஞ்சிலும் நீக்கமற நிறைந்துள்ளான்.
***************************
1851@
துளக்கமில் சுடரை,* அவுணனுடல்-
பிளக்கும் மைந்தனைப்* பேரில் வணங்கிப்போய்*
அளப்பில் ஆரமுதை* அமரர்க்கு அருள்-
விளக்கினை* சென்று வெள்ளறைக் காண்டுமே 10.1.4
என்றும் ஒளி குறையா பெருஞ்சுடர் போன்றவனை, ஹிரண்யனின் உடல் பிளந்த வலிமை மிக்கவனை, நாம் திருப்பேர் நகர் சென்று அடி பணிவோம். உண்ண உண்ண திகட்டாத அமுதம் போன்றவனை, நித்யசூரிகளுக்கு அருள் விளக்காய் இருப்பவனை, இன்றே திருவெள்ளறை நகர் சென்று, அவன் மலரடி பற்றி நாம் வணங்குவோமாக !
************************
தலபுராணம் குறித்து: எம்பெருமான், அடியார்களின் இதயத்திலிருந்தும், அவ்வுறைவிடத்திலிருந்தும், தன்னை "பெயர்த்தெடுப்பது" இயலாத ஒன்று என்பதை உணர்த்துவதின் காரணமாக, திருப்பேர் நகர் என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தல புராணம் குறித்து வேத வியாசரின் பிரும்மாண்ட புராணத்திலும் சொல்லப்பட்டுள்ளது. உபமன்யு முனி, குழந்தையாக இருக்கையில் ஒரு முறை பசியால் அழுதபோது, சிவபெருமான் திருப்பாற்கடல் பாலை அவருக்கு அளித்த தகவல் சிவபுராணத்தில் உள்ளது. சிவபெருமான் தன் பக்தரான உபமன்யு முனிக்கு தந்த தரிசனம் முழுமை பெறும் வண்ணம், திருமாலும் முனிவருக்கு உதவியருளுவது போல் இங்கு அமைந்துள்ளது சிறப்பு !
இத்திருச்செயலுடன் தொடர்புடைய பழங்கதை ஒன்று, தலப்பெருமாளுக்கு "அப்பக்குடத்தான்" என்ற திருநாமம் ஏற்பட்ட காரணத்தை சுவைபடச் சொல்கிறது ! உபரிசரவசு என்ற பாண்டிய மன்னன், மதம் பிடித்த ஒரு யானையை வேட்டையாடச் சென்றபோது, தவம் செய்து கொண்டிருந்த ஒரு யோகியை தவறுதலாகக் கொன்று விட்டான். அதனால் மனமுடைந்த அவன், தன் அரச பதவியைத் துறந்து, பாப விமோசனம் வேண்டி, திருப்பேர் நகரில் கடுந்தவம் செய்தவுடன், சிவபெருமான், மன்னன் முன் தோன்றி, அருளாசிகள் வழங்கி, அவ்விடத்தில் பெருமாள் கோயில் ஒன்றைக் கட்டுமாறு பணித்தார்.
ஸ்ரீமன் நாராயணன், அவனுக்கு பாப விமோசனம் அளிக்கும் வரை, தினம் பெருமாளைத் தொழுது, பிராமணர்களுக்கு அப்பத்தையும், பாயசத்தையும் பிட்சையாக வழங்குமாறும் சிவபெருமான் கூறினார். அதன்படி, திருப்பேர் நகரில் கோயில் கட்டிய உபரிசரவசு, தினம் அவ்வாறே பிட்சை வழங்கி வந்தான். ஒரு நாள், பெருமாள், ஓர் ஏழை பிராமணர் உருவில் மன்னன் முன் வந்து, தான் நெடுந்தூரத்தில் இருந்து வருவாதாயும், கடும்பசியில் உள்ளதாயும் கூறி, உணவளிக்குமாறு வேண்டினார். நூறு பேருக்கான உணவை (அப்பங்களை) உண்ட பின்னரும் பெருமாள் தன் பசி தீர்ந்தபாடில்லை என்றுரைத்ததால், மேலும் உணவு சமைத்து வழங்க சற்று நேரம் ஆகுமென்பதால், பெருமாளை தன் வீட்டில் ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு மன்னன் வேண்டினான்.
அதே நேரத்தில், தன் பக்தனான மார்க்கண்டேயரின் முன் தோன்றிய சிவபெருமான், திருப்பேர் நகரில், ஒரு ஏழை பிராமணர் வடிவில், பெருமாள் வந்து தங்கியிருக்கும் விஷயத்தை (மார்க்கண்டேயர் தனது 16-வது வயதில் மரணம் அடைவார் என்று விதிக்கப்பட்ட காரணத்தின் பேரில்) அவரிடம் கூறி, அவருக்கு இறவா வரம் கிடைக்க, பெருமாளின் அருளாசியைப் பெறுவதே ஒரே வழி என்று கூறி மறைந்தார்.
மன்னனின் வீட்டுக்குச் சென்ற மார்க்கண்டேய ரிஷி, சயன கோலத்தில், ஒரு கையில் அப்பக்குடத்துடன் இருந்த ஏழை பிராமணரை நூறு முறை பணிந்தெழுந்தார். உடனே பெருமாள் அவருக்குத் தன் சுயரூபம் காட்டி, வலக்கையை உயர்த்தி அவரை ஆசிர்வதித்து, இறவா வரமளித்தார். உபரிசரவசுவுக்கும் சாப விமோசனம் வழங்கினார்.
மார்க்கண்டேயருக்கு ஆசி வழங்கிய அத்திருகோலத்திலேயே, திருப்பேர் நகரில் மூலவர் காட்சியளிக்கிறார். பெருமாளுக்கு தினமும் இரவில் அப்பம் பிரசாதமாக நைவேத்யம் செய்வதும் மரபானது. மார்க்கண்டேய ரிஷி இத்திருத்தலத்தில் இறவா வரம் வேண்டிப் பெற்றதால், அவர் தினம் ஸ்நானம் செய்த குளம் மிருத்யு விநாசினி என்று போற்றப்படுகிறது.
நம்மாழ்வார் திருவாய்மொழியின் முடிவில் எழுதிய திருப்பாசுரங்கள் இத்தலப் பெருமாளின் புகழ் பாடுவதை வைத்து, அவர் திருப்பேர் நகரில் மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. நம்மாழ்வார் இப்பதினோரு பாசுரங்களில், பெருமாள் திருமாலிருஞ்சோலையிலிருந்து திருப்பேர் நகர் வந்து, மாந்தர்க்கு காட்சியளித்து, தன் திருவயிற்று அப்பங்களை அவர்கட்கு வழங்கி, பசித்துயரை போக்குவதாகப் பாடியுள்ளார் ! "ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே" என்று உருகுகிறார் !!!
****************
3860@..
திருமாலிருஞ்சோலை மலை* என்றேன் என்ன*
திருமால்வந்து* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*
குருமா மணியுந்து புனல்* பொன்னித் தென்பால்*
திருமால்சென்று சேர்விடம்* தென் திருப்பேரே. (2) 10.8.1
3861@
பேரே உறைகின்ற பிரான்* இன்று வந்து*
பேரேனென்று* என்னெஞ்சு நிறையப் புகுந்தான்*
காரேழ் கடலேழ்* மலையேழ் உலகுண்டும்*
ஆராவயிற்றானை* அடங்கப் பிடித்தேனே. 10.8.2
3862@
பிடித்தேன் பிறவி கெடுத்தேன்* பிணிசாரேன்*
மடித்தேன் மனைவாழ்க்கையுள்* நிற்பதோர் மாயையை*
கொடிக் கோபுரமாடங்கள்சூழ்* திருப்பேரான்*
அடிச்சேர்வது எனக்கு* எளிதாயின வாறே. 10.8.3
3869@..
உற்றேன் உகந்து பணிசெய்து* உனபாதம்-
பெற்றேன்* ஈதே இன்னம்* வேண்டுவது எந்தாய்*
கற்றார் மறைவாணர்கள்வாழ்* திருப்பேராற்கு*
அற்றார் அடியார் தமக்கு* அல்லல் நில்லாவே. (2) 10.8.10.
*********************
வைகுண்ட ஏகாதசியும், பங்குனி பிரம்மோத்சவமும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தினமும், பெருமாளுக்கு 'ஆறு கால பூஜை' நடைபெறுவது மரபு. இக்கோயிலுக்கு சோழ மற்றும் விஜயநகர மன்னர்கள் செய்த திருத்தொண்டுகள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இங்கு காணப்படுகின்றன.
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 238 ***